அணைக்கட்டு ஜவுளிக்கடையில் பயங்கர தீ பல லட்சம் ரூபாய் துணிகள் நாசம்
அணைக்கட்டில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசமானது.
அணைக்கட்டு,
அணைக்கட்டு கருணீகர் தெருவை சேர்ந்தவர் அம்ஜத்பாபு (வயது 45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக அணைக் கட்டு பஜார் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் பொங்கல் பண்டிகையையொட்டி வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவு 1 மணியளவில் ஜவுளி கடையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதைகண்ட அப்பகுதி மக்கள் அணைக் கட்டு போலீசாருக்கும், ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கடை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் கடையின் உள்ளே சென்று தீயை அணைப்பதற்காக ஷட்டரை திறக்க முயன்றனர். ஆனால் ஷட்டரை திறக்க முடியாததால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் விடிய, விடிய தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் கடைக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான துணிகள் கொண்டுவரப்பட்ட நிலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்துவிட்டது.
மேலும் இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story