திருவண்ணாமலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கிவைத்தார்
திருவண்ணாமலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், வணிகர் சங்கங்கள், அனைத்து தொண்டு நிறுவனங்கள் இணைந்து பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் பாரிஜாதம் முன்னிலை வகித்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் வரவேற்றார். இந்த ஊர்வலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் முன்பு தொடங்கி 4 மாடவீதிகள் வழியாக சென்றது.
ஊர்வலத்தில் சென்றவர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். இதில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத்கண்ணா, கார்த்திகேயன், மதன்குமார் மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story