ஊட்டி ரேஷன் கடையில் 2017-ம் ஆண்டின் வேட்டி, சேலைகள் வினியோகம்? - அதிகாரிகள் ஆய்வு
ஊட்டி ரேஷன் கடையில் 2017-ம் ஆண்டின் வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யப்பட்டதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தலையாட்டுமந்து பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவை மிக மோசமாக இருப்பது தெரியவந்ததால், பொதுமக்கள் அதனை வாங்க மறுத்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் அரசு மூலம் அனுப்பி வைக்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலைகளை பொதுமக்கள் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது கடந்த 2017-ம் ஆண்டின் விலையில்லா 136 வேட்டிகள், 80 சேலைகள் ரேஷன் கடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஊட்டி தாலுகா உணவு வழங்கல் அலுவலர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இந்த ஆண்டுக்கான சீல் வைக்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலைகள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story