தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் பொதுமக்களிடம் குறைகள் கேட்பு


தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் பொதுமக்களிடம் குறைகள் கேட்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:30 PM GMT (Updated: 9 Jan 2019 5:35 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது.

தர்மபுரி,

தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். இந்த கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குண்டலப்பட்டி, கோணங்கிநாயக்கனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மாரவாடி ஆகிய ஊர்களில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பகுதி பொறுப்பாளர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ., பார்.இளங்கோவன், தமிழ்மணி, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேட்டு வரவேற்று பேசினார்.

இந்தகூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது உங்கள் தொகுதிக்குட்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உங்கள் பகுதிக்கு வந்தார்களா? அவர்கள் உங்கள் குறைகளை கேட்டறிந்தார்களா? என்று கட்சி நிர்வாகிகள் கேட்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் எங்கள் பகுதியில் எந்த அடிப்படை தேவையும் நிறைவேற்றப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களையும் அளித்தனர். பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், அணிகளின் அமைப்பாளர்கள் ஆ.மணி, சந்திரமோகன், ரகீம், காவேரி,மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று காரிமங்கலம் ஒன்றியம் கும்பாரஅள்ளி, அடிலம் ஆகிய ஊர்களில் ஒன்றிய செயலாளர் குமரவேல் முன்னிலையிலும், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் பண்டஅள்ளி, ராஜாகொல்லஅள்ளி ஆகிய இடங்களில் ஒன்றிய செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் முன்னிலையிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றன.

Next Story