தேன்கனிக்கோட்டையில் பரபரப்பு: விசுவ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம்


தேன்கனிக்கோட்டையில் பரபரப்பு: விசுவ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் விசுவ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதமானது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிருஷ்ணன் கோவில் அருகில் வசித்து வருபவர் ரங்கநாத் (வயது 42). இவர் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணை தலைவராக உள்ளார். மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் ரங்கநாத் வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த ரங்கநாத் எழுந்து வந்து வீட்டின் முன்பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு சுவரில் தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையே இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டின் முன்பகுதி முழுவதும் தீயில் சேதமடைந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார்சைக்கிள்களும், ஒரு சைக்கிளும் தீயில் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் பட்டு, தாசில்தார் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடம் சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர்.

இது தொடர்பாக ரங்கநாத் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்தும், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் நீதிமன்ற தண்டனை குறித்தும் சமூக வலைதளங்களில் ரங்கநாத் பதிவு செய்திருந்ததாகவும், இந்த கருத்துக்கு எதிரானவர்கள்தான் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாகவும் கூறப்படுகிறது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசுவ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story