ஓசூர் அருகே போடூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் வனத்துறையினர் எச்சரிக்கை


ஓசூர் அருகே போடூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் வனத்துறையினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Jan 2019 10:15 PM GMT (Updated: 9 Jan 2019 5:50 PM GMT)

ஓசூர் அருகே போடூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 45 காட்டு யானைகள் உணவு தேடி அருகில் உள்ள போடூர்பள்ளம், நாயக்கனப்பள்ளி கிராமங்களுக்குள் புகுந்தன. இவைகள் நேற்று காலை வரையிலும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊருக்குள் சுற்றி திரிந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். இதைத் தொடர்ந்து அவைகள் போடூர் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் போடூர் வனப்பகுதியில் தற்போது யானைகள் முகாமிட்டுள்ளதால் ஆழியாளம், ராமாபுரம், போடூர், பாத்தக்கோட்டா, நாயக்கனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு, வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story