ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பை இடையூறு இன்றி வழங்க வேண்டும் விற்பனையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பை இடையூறு இன்றி வழங்க வேண்டும் விற்பனையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:45 AM IST (Updated: 9 Jan 2019 11:28 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு இடையூறு இன்றி வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தினார்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை, ரேஷன்கடை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு ஆகியவற்றை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேர்பேட்டை ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் விவரங்கள், வழங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து பதிவேடு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அரிசி இருப்பு மற்றும் பொருட்கள் இருப்பு மற்றும் சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். மேலும், பொங்கல் பண்டிகைக்கு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் பொங்கல் பை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ஆகியவற்றை எவ்வித இடையூறும் இன்றி வழங்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தேன்கனிக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அரிசி இருப்பு விவரங்களை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையை கலெக்டர் நேரில் பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை குறித்தும், உள்நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனை வளாகத்தை சுத்த மாகவும், சுகாதரமாகவும் பராமரிக்க டாக்டர்களுக்கு கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது தாசில்தார் வெங்கடேசன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story