உஸ்தலஅள்ளி மலையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


உஸ்தலஅள்ளி மலையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 11:15 PM GMT (Updated: 9 Jan 2019 6:02 PM GMT)

உஸ்தலஅள்ளி மலையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, 

வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் இட்டிக்கல் கிராமத்தின் மேற்கே உள்ள உஸ்தலஅள்ளி மலையில் பில்காடு என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு பெரிய பாறையின் கூரை பகுதியிலும் சாய்தளத்திலும் புதிய பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

மனிதன் எழுத்துக்களை கண்டறிவதற்கு முன் தன் எண்ணங்களை வெளிப்படுத்த ஓவியங்கள் வரைய தொடங்கினான். இதுவே எழுத்துக்களுக்கு முன்னோடி எனலாம். அவர்கள் வாழ்ந்த இப்பகுதியில், வாழ்ந்ததற்கான அடையாளங்களாகவும் இவற்றை காணலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் இருந்து இது மாறுபட்டு உள்ளது. பாறையின் கூரை பகுதியில் காணப்படுவதோடு கீழ் தளத்திலும் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் இங்கேதான் காணப்படுகிறது. கீழ் தளத்தில் இரண்டு மனித உருவங்கள் கையில் வில்லில் இருந்து அம்பு எய்வது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு உருவமும் உடலை எதிர்பக்கமாக திருப்பி அதற்கு எதிர்பக்கமாக அம்புவிடும் வகையில் வரையப்பட்டுள்ளது. இவை அவர்கள் வேட்டையில் இறந்ததன் நினைவாக வரையப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. இது நடுகல் எடுப்பதற்கு முன்னோடியாகவும் இருக்கலாம். மேல் உள்ள பாறையில் பாண்டில் விளக்கு நான்கும், அனுமார் போல் காட்சி அளிக்கும் ஒரு உருவமும், வில்லில் இருந்து அம்பு புறப்படுவது போல் ஒரு ஓவியமும் வரையப்பட்டுள்ளது.

இது அக்காலத்தில் கயிரோடு இணைந்த அம்பை விட்டு அதிலிருந்து எளிதில் விலங்கினங்களை பிடிக்க ஏதுவான அமைப்பாக இருக்கலாம். இது மட்டுமில்லாது நாமம், ‘ப’ போன்ற வடிவம், ஒரு விலங்கின் வடிவம் ஆகியவை இப்பாறைகளில் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ரவி, நாராயணமூர்த்தி, மதிவாணன், விஜயகுமார், காவேரி, டேவிஸ், கணேசன், செல்வம், பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் செய்திருந்தார்.

Next Story