வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு: தபால்துறை பணிகள் பாதிப்பு


வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு: தபால்துறை பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று 2-வது நாளாக நாமக்கல் மாவட்டத்தில் தபால்துறை பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

நாமக்கல், 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக தபால் நிலையங்களில் மொத்தம் உள்ள 950 பேரில் நேற்று 527 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கிராமபுறங்களில் பல தபால் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தது. நகர்புறங்களில் உள்ள தபால் நிலையங்களில் வெறிச்சோடி கிடந்தன. அவற்றில் தபால்கள் கட்டு, கட்டாக தேங்கி கிடந்தன.

இதையொட்டி நேற்று 2-வது நாளாக தபால்துறை ஊழியர்கள் நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மொத்தம் உள்ள 1,006 வங்கி பணியாளர்களில் 273 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வங்கி சேவையும் பாதிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். ஊழியர்களை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள 280 பேரில் 145 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் நேற்று 2-வது நாளாக நாமக்கல் தொலைதொடர்பு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் வருமானவரித்துறை அலுவலர்களும் 90 சதவீதம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் தினசரி நடைபெறும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. அவை வெறிச்சோடி கிடந்தன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 125 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் பஸ் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆனால் சுமார் 10 சதவீத அளவில் ஆட்டோக்கள் மட்டும் நேற்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.

லாரி, கார் உள்ளிட்ட இதர வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. அனைத்து கடைகளும் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Next Story