பெண் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்சின் அச்சு முறிந்து டயர் கழன்றது
பெண் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்சின் அச்சுமுறிந்து டயர் கழன்றது. டிரைவரின் சாமர்த்தியத்தால் மலைப்பாதையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர், பந்தலூரில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளன. அவசர காலங்களில் கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளை விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதியில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதற்கு ஏற்ப பல இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தேவாலா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெண்ணின் உறவினர்கள் ஆம்புலன்சை வரவழைத்தனர். இதற்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் தேவாலா வந்தது. பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து கொண்டு கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது கூடலூர் நந்தட்டி முருகன் கோவில் அருகே வளைவில் ஆம்புலன்ஸ் வந்தபோது திடீரென அச்சு முறிந்து இடதுபக்க டயர் கழன்று நடுரோட்டில் விழுந்தது. இருப்பினும் விபத்தில் சிக்காமல் இருக்கும் வகையில் டிரைவர் துரை சாமர்த்தியமாக ஆம்புலன்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதனால் மலைப்பாதையில் நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் கூடலூர்- கோழிக்கோடு சாலையின் குறுக்கே ஆம்புலன்ஸ் நின்றதால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
மேலும் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த பெண் நோயாளி சிரமத்துக்கு ஆளானார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பெண் நோயாளியை ஏற்றி சென்றது.
பின்னர் தகவல் அறிந்த கூடலூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மீட்பு வாகனத்தை கொண்டு வந்து சாலையின் குறுக்கே நின்றிருந்த ஆம்புலன்சை அங்கிருந்து எடுத்து சென்றனர். பராமரிப்பின்றி இயக்கப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story