வீட்டுமனையை தந்தை பெயருக்கு மாற்ற ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய அதிகாரி, உதவியாளர் கைது
கோவையில் மகனின் பெயரில் உள்ள வீட்டு மனையை தந்தையின் பெயருக்கு மாற்ற ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய அதிகாரி, உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கோவை,
திருப்பூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58). இவருடைய மகன் கோபால் சமீபத்தில் உயிரிழந்தார். கோபாலின் பெயரில் திருப்பூரில் வீட்டுவசதி வாரியத்துக்கு உட்பட்ட வீட்டுமனை ஒன்று உள்ளது. இந்த வீட்டுமனையை தனது பெயருக்கு மாற்றி தரும்படி கோவை டாடாபாத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் விஜயகுமார் விண்ணப்பித்தார்.
வீட்டு வசதி வாரிய விற்பனை பிரிவு மேலாளர் மோகன் (54), அவரது உதவியாளர் தண்டபாணி (45) ஆகியோர் வீட்டு மனை பத்திரத்தை விஜயகுமார் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றால் இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விஜயகுமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் நோட்டுகளை வழங்கினர்.இதையடுத்து விஜயகுமார் நேற்று மாலை கோவை டாடாபாத் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த மோகன் மற்றும் தண்டபாணியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வீட்டு வசதி வாரிய நுழைவு வாயில் கேட்டை பூட்டிய போலீசார் உள்ளே இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்க வில்லை. மேலும் வெளிநபர்கள் யாரையும் உள்ளே வரவும் அனுமதிக்க மறுத்து விட்டனர். மோகன், தண்டபாணி ஆகியோரின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story