காரை மறித்து வக்கீல் வெட்டிக்கொலை; அண்ணன் உள்பட 2 பேர் படுகாயம் மர்ம கும்பல் வெறிச்செயல்


காரை மறித்து வக்கீல் வெட்டிக்கொலை; அண்ணன் உள்பட 2 பேர் படுகாயம் மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:15 PM GMT (Updated: 9 Jan 2019 7:18 PM GMT)

மணப்பாறை அருகே பட்டப்பகலில் மர்ம கும்பல் காரை வழிமறித்து அதில் இருந்த வக்கீலை வெட்டிக்கொலை செய்தது. மேலும் அவருடன் சென்ற அண்ணன் உள்பட 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி,

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 33). இவர் டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் ஜெகதீஷ் பாண்டி (30) வக்கீல். சிலம்பரசனுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று மதுரையில் இருந்து சிலம்பரசன், ஜெகதீஷ் பாண்டி மற்றும் ஜெயபாண்டி (32), ரபீக் (30), சவுந்தரபாண்டியன், சூரியபிரகாஷ் ஆகிய 6 பேரும் ஒரு காரில் அய்யர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சிலம்பரசன் ஓட்டினார். கார் மதியம் 2.30 மணி அளவில் மணப்பாறை - குளித்தலை சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென மற்றொரு காரில் வந்தவர்கள் சிலம்பரசன் உள்ளிட்டோர் சென்ற காரை முந்திச் சென்று வழிமறித்தனர். சிலம்பரசன் காரை நிறுத்தியதும், மற்றொரு காரில் வந்த 5 பேர் அரிவாள் மற்றும் கத்தியுடன், காரின் கதவை திறந்து ஜெகதீஷ் பாண்டி, சிலம்பரசன், ஜெயபாண்டி உள்ளிட்டவர்களை அரிவாளால் வெட்டியும், கத்தியாலும் குத்தினர்.

அப்போது காரில் இருந்த ரபீக், சவுந்தரபாண்டியன், சூரியபிரகாஷ் ஆகியோர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் இறங்கி தப்பியோடி விட்டனர். இந்தநிலையில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ் பாண்டி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மேலும் சிலம்பரசன், ஜெயபாண்டி ஆகியோர் காயத்துடன் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு ஓடிவந்தனர். அங்கிருந்தவர்களிடம் காப்பாற்றும்படி கூறியதை அடுத்து உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மர்ம கும்பல் காரில் ஏறி தப்பி சென்றனர்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெகதீஷ் பாண்டியை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சிலம்பரசன், ஜெயபாண்டி ஆகிய இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் மர்ம கும்பலிடம் இருந்து தப்பித்து சென்ற ரபீக், சவுந்தரபாண்டி, சூரியபிரகாஷ் ஆகியோர் திரும்பி வந்து போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story