நிலம் விற்பனைக்கு உள்ளதாக வேலூருக்கு வரவழைத்து சென்னை ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி ரூ.26 லட்சம் பறிப்பு மர்மகும்பல் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வேலூரில் நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறி சென்னை ரியல் எஸ்டேட் உரிமையாளரை வரவழைத்து காரில் ஈரோட்டிற்கு கடத்தி சென்று தாக்கி ரூ.26 லட்சத்து 20 ஆயிரம் பறித்த மர்மகும்பல் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை வடபழனி சைதாப்பேட்டை சாலை பன்னாமகால் பகுதியை சேர்ந்தவர் வில்சன் விமல் (வயது 44). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வில்சனை கடந்த மாதம் வேலூரில் இருந்து மர்மநபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், தங்களை வேலூரை சேர்ந்த விக்னேஷ், தமிழ்செல்வன் என அறிமுகப்படுத்தி கொண்டனர். தொடர்ந்து அவர்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நிலம் விற்பனைக்கு உள்ளது. அதனை வாங்க விரும்பினால் நேரில் வரவும் என்றும், வரும்போது நிலத்துக்கு முன்தொகை கொடுக்க ரூ.5 லட்சம் கொண்டு வரும்படியும் கூறி உள்ளனர்.
இதையடுத்து வில்சன் கடந்த மாதம் தனது காரில் வேலூருக்கு வந்தார். விக்னேஷ், தமிழ்செல்வன் இருவரும் அவரை அழைத்து சென்று கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள சில இடங்களை காண்பித்து உள்ளனர். பின்னர் அவர்கள் காட்பாடி, குடியாத்தம் பகுதியில் நிலங்கள் விற்பனைக்கு உள்ளதாகவும், அதனையும் பார்க்கும்படியும் கூறி வில்சனை அவர்கள் வந்த காரில் அழைத்து சென்றனர்.
காட்பாடி மற்றும் குடியாத்தம் பகுதியில் சில நிலங்களை பார்வையிட்ட போது விக்னேஷ், தமிழ்செல்வனின் நண்பர்கள் 4 பேர் அவர்களுடன் இணைந்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் திடீரென 6 பேரும் வில்சனை தாக்கி அவரிடமிருந்த ரூ.5 லட்சத்தை பறித்தனர். தொடர்ந்து வில்சனின் கண்களை கட்டி காரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு கடத்தி சென்றனர். அங்கு அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து, ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்களை பெற்றனர். பின்னர் அவரின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்து கொண்டனர். தொடர்ந்து அவரிடமிருந்து 4 காசோலைகள் மற்றும் எதுவும் எழுதாத பத்திரங்களில் கையெழுத்து வாங்கி உள்ளனர். பின்னர் அவரை மீண்டும் கண்களை கட்டி காரில் அழைத்து சென்று ஈரோட்டில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வில்சன் விமல் நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாரிடம் புகார் மனு அளித்தார். மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் வடக்கு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், விக்னேஷ், தமிழ்செல்வன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் விக்னேஷ், தமிழ்செல்வன் ஆகியோர் வேலூரை சேர்ந்தவர்களா? அல்லது வேறு பகுதியை சேர்ந்தவர்களா? அவர்களுடன் வந்த 4 பேர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்த 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வில்சனை தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண் யாருடையது? என்பது குறித்தும், அதன் விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story