கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே நடந்த கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோவை,

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் நடராஜன் நகரை சேர்ந்தவர் வசந்தி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 4 பேர் வீட்டுக்குள் புகுந்து வசந்தியை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 22 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த சம்பவத்துக்கு மறுநாள் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வியாபாரி சகாதேவன் என்பவர் தனது காய்கறி கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், 2 சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்த 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வீடு புகுந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவத்தில் கோவையை அடுத்த பன்னிமடையை சேர்ந்த சந்தீப் (வயது 24), சின்னதடாகத்தை சேர்ந்த மணி(28), கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கைகாட்டியை சேர்ந்த அசோக்(27), பாலக்காடு அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த நாகராஜ்(27) ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்குகள் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி நகை கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், வியாபாரியை வழிமறித்து பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி நாகராஜ் தீர்ப்பு கூறினார்.

இது குறித்து வக்கீல் ஒருவர் கூறியதாவது:-

ஒரே வழக்கில் இரண்டு பிரிவில் தனித் தனியாக 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தால் அந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்படும். ஆனால் இதில் 2 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த 2 வழக்குகளிலும் தனித்தனியாக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனித்தனி வழக்குகளில் ஏககாலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறமுடியாது. அதற்காக இந்த வழக்கில் ஒருவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை. 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தாலே போதுமானது.

மேலும் 2 வழக்கிலும் ஒரே நாளில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளதால் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுவே ஒரு வழக் கில் இன்று 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தீர்ப்பு கூறி விட்டு இன்னும் ஒரு மாதம் கழித்து மற்றொரு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கி இருந்தால் அந்த நபர் 7 ஆண்டு சிறை தண்டனையோடு கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story