கலெக்டர் காலில் விழுந்து மனுகொடுத்த பெண்ணால் பரபரப்பு கலப்பு திருமணம் செய்ததால் மாமியார் கொடுமை படுத்துவதாக புகார்


கலெக்டர் காலில் விழுந்து மனுகொடுத்த பெண்ணால் பரபரப்பு கலப்பு திருமணம் செய்ததால் மாமியார் கொடுமை படுத்துவதாக புகார்
x
தினத்தந்தி 10 Jan 2019 3:00 AM IST (Updated: 10 Jan 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

கலப்பு திருமணம் செய்ததால் மாமியார் கொடுமைப்படுத்துவதாகவும், அவரிடமிருந்து தனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் ராமன் காலில் விழுந்து பெண் மனு கொடுத்தார்.

வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க பெண், பள்ளி சீருடை அணிந்த மகன், மகள்களுடன் வந்தார். அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தனது மகள்கள், மகனுடன் வந்திருப்பதாக கூறினார். இதையடுத்து போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். அந்த பெண் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் வருகைக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் 11 மணியளவில் கலெக்டர் ராமன் வந்தார். காரில் இருந்து அவர் இறங்கி அலுவலகத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு காத்திருந்த அந்த பெண் திடீரென கலெக்டர் காலில் விழுந்து கண்கலங்கியபடி மனு அளித்தார். அப்போது அவர், கலப்பு திருமணம் செய்து கொண்டதால் மாமியார் தன்னையும், குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவதாகவும், நாங்கள் வாழ பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தி தரும்படியும் கூறினார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் காட்பாடி அருகேயுள்ள கோட்டை மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி சசிகலா (வயது 35) என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவும், வேறு சமுதாயத்தை சேர்ந்த வேல்முருகனும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கலப்பு திருமணம் செய்து கொண்டதை வேல்முருகன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சசிகலா வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை வேல்முருகனின் தாயார் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. கணவர் மற்றும் குழந்தைகளையும் வெறுத்து ஒதுக்கி உள்ளார். கடந்த சில நாட்களாக அனைவரையும் வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி வந்துள்ளார். வேல்முருகனுக்கு போதிய வருமானம் இல்லாததால் வெளியே சென்று வாழ முடியாத நிலை உள்ளது. எனவே அனைவரும் வாழ பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை மனு அளித்ததாக சசிகலா கூறினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story