ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இல்லை வைகோ பேட்டி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பு இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
தூத்துக்குடி,
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்துவிட்டது என்று செய்தி பரவியது. ஆலையை திறக்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் மனு கொடுக்க வேண்டும். அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்து உள்ள நிபந்தனைகளை சரி செய்ய முடியாது. ஆகையால் ஆலையை திறக்க முடியாது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தக்காரர்கள் சென்னைக்கு செல்கிறார்கள். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அதில் எனக்கு உடன்பாடு. ஆனால் மக்கள் ஆலையை திறக்க சொல்வது போன்று ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்பாடு செய்து உள்ளது. ஒப்பந்தக்காரர்களை பற்றியோ, அவர்கள் அழைத்து செல்பவர்களை பற்றியோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. அது அவர்கள் ஜனநாயக உரிமை. ஆனால் அது ஒரு சதவீதம். 10 லட்சம் மக்கள் இங்கே எதிர்ப்பாக இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள். ஆகையால் ஸ்டெர்லைட் ஆலை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை. இனி திறக்க விடக்கூடாது.
முதல்-அமைச்சருக்கு என்னுடைய ஒரே கேள்வி. முதல்-அமைச்சர் ஏன் அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்க மறுக்கிறீர்கள். அமைச்சரவையை கூட்டி முடிவு எடுத்து இருந்தால் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கே இந்த வழக்கு சென்று இருக்காது. இது விசுவரூபம் எடுத்து இருக்கும் கேள்வி. நீங்கள் அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்க தடுப்பது எது?. அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கொள்கை முடிவு எடுக்கவில்லை என்றால், சந்தேகத்தின் கூரிய முள், உங்கள் மீதும் உங்கள் அமைச்சரவை மீதும் பாய்கிறது.
தினத்தந்தியில் நல்ல தலையங்கம் வந்து உள்ளது. சமூக நீதியின் கருவறை தமிழ்நாடுதான். பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சினையில், போகிற போக்கில் சமூகநீதிக்கு வேட்டு வைத்து விட்டு செல்லும் வேலையை மோடி செய்து உள்ளார். இதன் விளைவுகளை அவர் சந்திப்பார். இதனை எதிர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை. இதற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் சமூக நீதியை காக்க வேண்டும் என்ற நிலையை கடைபிடித்து மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். பல கட்சிகள் பா.ஜனதா வலையில் விழுந்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story