பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலைமறியல்


பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:30 PM GMT (Updated: 9 Jan 2019 8:29 PM GMT)

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

தமிழக அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கி வருகிறது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போளிவாக்கம் விஜயாநகர் பகுதியில் பொதுமக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க அங்குள்ள ரே‌ஷன் கடைக்கு சென்றனர். ஆனால் அந்த ரே‌ஷன் கடை 7–ந் தேதியில் இருந்து திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் ரே‌ஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் திடீரென திருவள்ளூர்–ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஞானகுமார் மற்றும் போலீசார், பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நெடியம் கிராமத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் விற்பனையாளர் கமலக்கண்ணன் பொங்கல் பரிசுத்தொகுப்பை நேற்று வழங்கினார். பின்னர் மதியம் கடையை பூட்டிவிட்டு சாப்பிட சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பள்ளிப்பட்டு நகர் மாநில சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிப்பட்டு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு வந்த விற்பனையாளர் கமலக்கண்ணன் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story