சொரக்காப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி


சொரக்காப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2019 10:00 PM GMT (Updated: 9 Jan 2019 8:29 PM GMT)

சொரக்காப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் கொளத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் கம்பங்களை எடுத்து சென்று தேவைப்படும் இடங்களில் நடும் பணியை ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. இதற்காக தினக்கூலி அடிப்படையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 10 கூலித்தொழிலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று இவர்கள் கொளத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து 6 மின்கம்பங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு பொதட்டூர்பேட்டை நோக்கி சென்றனர்.

டிராக்டரில் ஏற்றப்பட்ட மின்கம்பங்கள் மீது தொழிலாளிகள் 10 பேரும் அமர்ந்திருந்தனர். சொரக்காப்பேட்டை அருகே கொசஸ்தலை ஆற்றுபாலத்தின் மேடான பகுதியை கடக்க முயன்றபோது டிராக்டர் நின்றுவிட்டது. பாரம் தாங்காமல் டிராக்டர் பின்னோக்கி நகர்ந்தது. இதை கண்ட டிரைவரும், மின்கம்பங்கள் மேல் அமர்ந்து சென்ற கூலித்தொழிலாளிகள் சிலரும் டிராக்டரில் இருந்து கீழே குதித்து தப்பினர். டிராக்டர் மின்கம்பங்களுடன் ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் 2 தொழிலாளிகள் மின்கம்பங்களின் அடியில் சிக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பே ட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்தவர்கள் ஆந்திரமாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 24), மற்றொருவர் கடப்பா மாவட்டம் கப்பலபள்ளி கிராமத்தை சேர்ந்த சீனு என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் இறந்த சீனுவின் தந்தை ராமய்யா இதே டிராக்டரில் பயணம் செய்து சிறு காயமும் இல்லாமல் உயிர்தப்பினார். தனது கண் எதிரில் மகன் விபத்தில் பலியானதை கண்டு அவர் கதறி அழுதார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story