கிண்டி, பெரம்பூர், பல்லாவரத்தில் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
சென்னை கிண்டி, பெரம்பூர், பல்லாவரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டத்தின் 2-வது நாளான நேற்று சென்னை கிண்டி ரெயில் நிலையத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் தொழிலாளர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி கிண்டி ரேஸ் கோர்ஸ் வழியாக கிண்டி ரெயில் நிலையத்துக்குள் செல்ல வந்த அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள், போலீசாரின் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் சென்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரமும், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கியும் சென்ற 2 மின்சார ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் மின்சார ரெயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து போராடியதால் சுமார் 20 நிமிடங்கள் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுப்பட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தராஜன், முன்னாள் எம்.ல்.ஏ. பீம்ராவ் உள்பட 600-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கிண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுபோல பெரம்பூர் ரெயில் மறியலில் ஈடுபட்ட 300 பேரும், பல்லாவரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 100 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா சாலை, தாராபூர் டவர் அருகே தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை, ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி. உள்பட தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது திடீரென்று அவர்கள், அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றிச்சென்றனர்.
இதேபோல், மதுரை, திருச்சியில் ரெயில் நிலையங்களில் ரெயில் மறியலிலும், தஞ்சாவூரில் சாலை மறியலிலும் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறும்போது, ‘தமிழகத்தில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் 40 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்று இருக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட வங்கி சேவைகள் பாதிக்கும். சென்னையில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் முடங்கிப்போய் இருக்கின்றன’ என்றார்.
இதுதொடர்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ள இந்த வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை ஆகும். இனியாவது தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு உடனடியாக தங்கள் தொழிலாளர்-விவசாயி விரோத கொள்கைகளை கைவிடும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story