மதுரை-போடி அகல ரெயில்பாதை அமைக்கும் பணி 75 ஆண்டு பழமையான ரெயில் நிலையம் இடிப்பு
மதுரை-போடி அகல ரெயில்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 75 ஆண்டு பழமையான போடி ரெயில்நிலைய அலுவலகம் இடிக்கப்பட்டது.
போடி,
மதுரையில் இருந்து போடி வரையிலான 90 கிலோமீட்டர் தூரம் மீட்டர் கேஜ் ரெயில்பாதையாக இருந்தது. இதனை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணி, கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. இதனையடுத்து அந்த பாதையில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் பணி தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில் இன்னும் நிறைவு பெறவில்லை.
போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், ஆமை வேகத்தில் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் ரெயில்பாதை அமைக்கும் பணிக்காக சமீபத்தில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது மதுரையில் இருந்து போடி வரை சிறு பாலங்கள் கட்டப்பட்டு, புதிதாக தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் ஆள் இல்லா ரெயில்வே கேட்டில் 60 அடி உயரத்தில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதேபோல் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதும், 75 ஆண்டுகள் பழமையானதுமான போடி ரெயில் நிலையம் நேற்று இடிக்கப்பட்டது.
பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரெயில் நிலையத்தை இடிக்கும் பணி நடந்தது.
மேலும் அணைக்கரைப்பட்டி தங்கபாலம் என்ற இடத்தில், கொட்டகுடி ஆற்றின் குறுக்கே ரெயில்வே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, அகல ரெயில்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story