கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் தொழிற்சங்கத்தினர் மறியல் 78 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் தொழிற்சங்கத்தினர் மறியல் 78 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 9:06 PM GMT)

குளித்தலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, சாலைமறியல் செய்தனர். இதில் 78 பேரை போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக குளித்தலை காந்திசிலை முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஊர்வலமாக வந்த போராட்டக்குழுவினர் குளித்தலை தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் இலக்குவன் மறியலை தொடங்கி வைத்தார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 78 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வைகநல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

குளித்தலையில் எல்.ஐ.சி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி குளித்தலை எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் இச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் குளித்தலை வட்ட கிளைத்தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகநாதன், முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story