போலீஸ் துறை சார்பில் ஆன்லைனில் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் சேவை


போலீஸ் துறை சார்பில் ஆன்லைனில் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் சேவை
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் துறை சார்பில், ஆன்லைனில் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

தேனி,

அரசு துறைகளின் பல்வேறு நிலைகளில் பணி நியமனம் செய்யும் முன்பு சம்பந்தப்பட்டவர்களின் விவரங்கள் போலீஸ் துறை மூலம் சரிபார்க்கும் வழக்கம் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா? அவர்கள் கொடுத்த விவரங்கள் சரியானது தானா? என்பது போன்ற சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இதுமட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களுக்கு நியமனம் செய்ய உள்ள ஆட்கள் குறித்த விவரங்களை போலீஸ் துறை மூலம் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற நன்னடத்தை சான்றிதழை, ஆன்லைன் மூலம் பெற்று கொள்ளும் வசதியை போலீஸ் துறை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய சேவை தொடக்க விழா, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் இந்த சேவையை தொடங்கி வைத்து, நன்னடத்தை சான்றிதழை சரிபார்ப்பு பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கினார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த புதிய ஆன்லைன் சேவை மூலம், தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமாக சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு ஆகிய சேவைகளை பெறலாம். பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ese-rv-i-ces.tnp-o-l-i-ce.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இந்த சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

இச்சேவையை பயன்படுத்தி கொள்வதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.500, தனியார் நிறுவனங்கள் எனில் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையினைப் பயன்படுத்தி செலுத்தலாம்.

போலீஸ் நன்னடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனி நபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக போலீஸ் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா? என்ற விவரம் சரிபார்க்கப்படும்.

தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். இந்த சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் போலீஸ் நிலையத்துக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து, அதற்கான அறிக்கையினை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்.

சரிபார்ப்பு அறிக்கையில் உள்ள ‘கியூ ஆர்’ குறியீட்டை வைத்து ஸ்கேன் செய்தும் அல்லது இணையதள சேவையில் உள்ள சரிபார்ப்பு என்ற பகுதியின் மூலமும் இதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் போது பி.வி.ஆர். என்ற ஒரு எண் வழங்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம்.

இந்த சேவை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் கேள்வி, பதில் விளக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுகுறித்து இந்த சேவை இணையதளத்தில் உள்ள பின்னூட்டம் என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்கும் குறைகள், புகார்கள் போலீஸ் சூப்பிரண்டின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும். விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத்தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், போலீஸ் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story