பிறந்த நாளுக்கு வாழ்த்து கூற முடியாததால் நடிகர் யஷ் வீட்டு முன்பு ரசிகர் தீக்குளித்து தற்கொலை


பிறந்த நாளுக்கு வாழ்த்து கூற முடியாததால் நடிகர் யஷ் வீட்டு முன்பு ரசிகர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 Jan 2019 3:37 AM IST (Updated: 10 Jan 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் யஷ்சுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற முடியாததால், அவரது வீட்டு முன்பு ரசிகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர், நடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் கே.ஜி.எப். படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. நடிகர் யஷ்சுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு நடிகர் யஷ், ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெறுவது உண்டு. ஆனால் நடிகர் யஷ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால், இந்த ஆண்டு அவர் பிறந்தநாளை கொண்டாடவில்லை. மேலும் ரசிகர்களையும் சந்தித்து நடிகர் யஷ் வாழ்த்து பெறவில்லை.

நடிகர் யஷ்சின் தீவிர ரசிகராக துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த ரவி (வயது 28) இருந்தார். இவர், தனது பெற்றோருடன் பெங்களூரு லக்கெரே அருகே வாடகை வீட்டில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் நடிகர் யஷ்சுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக, கிரிநகர் அருகே ஒசகெரேஹள்ளியில் உள்ள நடிகர் யஷ்சின் வீட்டுக்கு ரவி சென்றார். ஆனால் நடிகர் யஷ் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்பதால், அவர் வீட்டில் இருக்கவில்லை. இதனால் நடிகர் யஷ்சை பார்க்க முடியவில்லை என்பதாலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற முடியாததாலும் ரவி மனம் உடைந்ததாக தெரிகிறது.

வீட்டு முன்பு தீக்குளித்தார்

இந்த நிலையில், நடிகர் யஷ் வீட்டு முன்பு வைத்தே ரவி தனது உடலில் பெட்ேரால் ஊற்றிக் கொண்டு திடீரென்று தீவைத்து கொண்டார். இதனால் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. வலி தாங்க முடியாமல் உடலில் எரியும் தீயுடன் ரவி அங்கும், இங்கும் ஓடினார். இதை பார்த்து யஷ் வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரவியின் உடலில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி போலீஸ்காரர்கள் அணைத்தனர். உடல் கருகி உயிருக்கு போராடிய ரவி உடனடியாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நடிகர் யஷ் சென்றார். பின்னர் ரவியின் உடல் நலம் குறித்து நடிகர் யஷ் டாக்டர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். மேலும் ரவியின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறினார். அதே நேரத்தில் தனது ரசிகர்கள் இதுபோன்ற முடிவை தயவு செய்து எடுக்க வேண்டாம் என்றும், ரவி தீக்குளித்தது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் நடிகர் யஷ் கூறினார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில், விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி, நேற்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடலை பார்த்து ஒரே மகனையும் இழந்து விட்டோமே என்று கூறி ரவியின் தந்தை ராமண்ணா மற்றும் தாய் கதறி அழுதார்கள். இதுபற்றி அறிந்ததும் கிரிநகர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது நடிகர் யஷ்சுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற முடியாததால் மனம் உடைந்து ரவி தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகர் யஷ்சின் ரசிகர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story