ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், நர்சு அலட்சியத்தால் நடுரோட்டில் குழந்தை பெற்றெடுத்த பெண் சமூகவலைத்தளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், நர்சு ஆகியோரின் அலட்சியத்தால் நடுரோட்டில் பெண், குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத் தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா சித்தரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சவுடய்யா. கூலி தொழிலாளி. இவரது மனைவி கங்கமல்லம்மா (வயது 30). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திங்கட்கிழமை மதியம் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதைதொடர்ந்து தனது கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மனைவி கங்கமல்லம்மாவை சவுடய்யா அழைத்துச் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டரும், நர்சும், ஊழியர்களும் மதிய சாப்பாடு நேரத்திற்கு நீங்கள் வந்து இருக்கிறீர்கள். நாங்கள் சாப்பிட்டு வருகிறோம். அதுவரை காத்திருங்கள். இல்லையெனில் செல்லுங்கள் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் சாப்பிட சென்றுள்ளனர்.
நடுரோட்டில் குழந்தை பிறந்தது
இதற்கிடையே பிரசவ வலியால் கங்கமல்லம்மா அலறி துடி, துடித்தார். இதை பார்த்த சவுடய்யா கைதாங்கலாக அவரை அழைத்துக்கொண்டு சித்ரதுர்கா மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு செல்ல அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது நடுரோட்டில் கங்கமல்லம்மா பிரசவ வலியால் துடித்து கீழே விழுந்தார். இதைபார்த்த சில பெண்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் கங்கமல்லம்மாவுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அப்போது சில பெண்கள் சுற்றி நின்று தங்கள் சேலையை கூரையாக்கி நின்றிருந்தனர்.
விசாரணை நடத்தி நடவடிக்கை
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்திலும், கன்னட செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர், நர்சு மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கங்கமல்லம்மாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் சித்ரதுர்கா மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் நீரஜ் பட்டீலிடம் புகார் தெரிவித்தனர். இதை கேட்டறிந்த அவர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story