முதல்-மந்திரியான எனது கைகள் கட்டப்பட்டுள்ளன குமாரசாமி பேச்சால் பரபரப்பு
முதல்-மந்திரியான எனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், என்னை காங்கிரசார் தான் இயக்குகிறார்கள் என்றும் குமாரசாமி பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குமாரசாமி மனம் விட்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பேசியதாக வெளியான தகவல் பற்றிய விவரம் வருமாறு:-
நான் முதல்-மந்திரியாக உள்ளேன். ஆனால் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன. என்னை காங்கிரஸ் மந்திரிகள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தான் இயக்குகிறார்கள். கட்சியின் நலன் கருதி இதை சகித்துக்கொண்டு செல்கிறேன்.
பொறுமையாக இருங்கள்
என்னால் சுயமாக செயல்பட முடியவில்லை. நான் நினைக்கும் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அதனால் புதிய திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லாத நிலை உள்ளது. காங்கிரசார் என்ன பேசினாலும், அதற்கு நீங்கள் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளிக்க வேண்டாம். கூட்டணி அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் வரை பொறுமையாக இருங்கள்.
அதிகாரம் கிடைக்கும்
நாடாளுமன்ற தேர்தலில் நாம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்காக நீங்கள் பாடுபடுங்கள். நமக்கு அதிக எம்.பி.க்கள் கிடைத்தால், நமக்கு அதிகாரம் கிடைக்கும்.
இவ்வாறு குமாரசாமி பேசியதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story