அரசியல்வாதிகளுடன் கைகோர்க்கக்கூடாது; கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நடவடிக்கை, அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டிப்பு


அரசியல்வாதிகளுடன் கைகோர்க்கக்கூடாது; கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நடவடிக்கை, அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 5:00 AM IST (Updated: 10 Jan 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அரசியல்வாதிகளுடன் அதிகாரிகள் கைகோர்க்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மதுரை,

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கரூர் திருமாநிலையூரில் பஸ்நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை 2 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த கடந்த 2017–ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, ‘பஸ் நிலையத்திற்காக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை காட்டிலும் பொருத்தமான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சிறந்தது என்று ஏற்கனவே அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மாற்று இடம் தேர்வு செய்துள்ளதாக தெரிவிப்பது ஏற்கத்தக்கதல்ல. கோர்ட்டிடம் விளையாடாதீர்கள்.

அரசியல்வாதிகளுடன் அதிகாரிகள் கைகோர்க்கக்கூடாது. ஆட்சியாளர்கள் மாறலாம். அரசு மாறாது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினர்.

அதற்கு நகராட்சித்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங், ‘‘முதல்–அமைச்சருடன் கலந்து ஆலோசித்து பின்னர் தான் உறுதி அளிக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், கோர்ட்டு உத்தரவை நிபந்தனை இல்லாமல் நடைமுறைப்படுத்துகிறோம் என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் நேரில் ஆஜராக தேவையில்லை. அமல்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை 11–ந்தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.


Next Story