பாராபட்சமின்றி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்


பாராபட்சமின்றி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:38 PM GMT (Updated: 9 Jan 2019 10:38 PM GMT)

அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாராபட்சமும் இல்லாமல் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேவகோட்டை,

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து போனது. இதனால் இங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஆண்டு பருவமழையை நம்பி விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தனர். ஆனால் 2 மாவட்டங்களிலும் கடந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்யவில்லை. இதனால் விளை நிலத்தில் பயிர் முளைத்த நிலையில் பல இடங்களில் சாவியானது. இடையில் கஜா புயலும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் புயலால் நாசமாயின. குறிப்பாக தேவகோட்டை வட்டாரத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதனால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை 100 சதவீதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் சேதத்திற்கு ஏற்ப 12 சதவீதம், 18 சதவீதம் என்று மாவட்டத்தில் பல கிராமங்களிலும், 70 சதவீதம் மேலும் பல இடங்களில் வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

டெல்லியில் இருந்து ரேண்டம் என்று பெயரிட்டு அங்கிருந்து குரூப் வாரியாக தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் பயிர் விளைச்சல் குறித்து அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்துகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் விளையாத கிராமங்களுக்கு கூடுதல் இன்ஸ்சூரன்ஸ் தொகை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் நல்ல விளைந்த பகுதிகளில் கூடுதலாகவும், விளையாத பகுதிகளில் குறைவாகவும் வழங்க போவதாக அறிவித்திருப்பது விவசாயிகளிடம் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

மேலும் தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டு தொகை வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மத்திய–மாநில அரசுகள் மீண்டும் அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் பாரம்பட்சம் இன்றி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story