சுற்றிப்பார்க்க வந்த இடத்தில் செல்போன் திருடிய 3 கல்லூரி மாணவர்கள் கைது


சுற்றிப்பார்க்க வந்த இடத்தில் செல்போன் திருடிய 3 கல்லூரி மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:16 AM IST (Updated: 10 Jan 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

சுற்றிப்பார்க்க வந்த இடத்தில் செல்போன் திருடிய நாக்பூரை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை கிர்காவ் கடற்கரையில் சம்பவத்தன்று போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர், கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வாலிபர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர் மூன்று பேரையும் பிடித்து சோதனை செய்தார். இதில் அவர்களிடம் 5 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி கேட்டபோது அவர்கள் 3 பேரும் பதற்றம் அடைந்தனர். போலீஸ்காரர் அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவை திருட்டு செல்போன்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரி மாணவர்கள்

பின்னர் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:- பிடிபட்டவர்களில் ஒருவர் பிரதிக் கவுதம் வாவரி (வயது 19). மற்ற இருவரும் 17 வயதுக்குட்டவர்கள். அவர்கள் 3 பேரும் நாக்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் ஆவர். அவர்கள் மும்பையை சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் போதிய பணம் இல்லாததால் ரெயில் பயணிகள் மற்றும் நடைபயிற்சி செல்பவர்களிடம் செல்போன்களை திருடியுள்ளனர்.

இதுபற்றி நாக்பூரில் உள்ள அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று போலீசார் கூறினர்.

Next Story