48 கிலோ மீட்டர் வழித்தடத்தில் நாக்பூர் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் மந்திரி சபை ஒப்புதல்
நாக்பூரில் 48 கிலோ மீட்டர் வழித்தடத்தில் அமைக்கப்படும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
மும்பை,
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நேற்று முன்தினம் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக நாக்பூர் 2-ம் கட்ட மெட்ரொ ரெயில் திட்டத்திற்கான பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு தேவைப்படும் ரூ.11 ஆயிரத்து 239 கோடி தொகையை ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
48.29 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் 35 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும். காம்ளே, ஹிஞ்னா, பார்டி மற்றும் புட்டிபோரி போன்ற பகுதிகள், இந்த மெட்ரோ ரெயில் திட்டம் மூலம் இணைக்கப்படும்.
‘ஸ்மார்ட்’ திட்டம்
அதுமட்டுமின்றி விவசாய மற்றும் அதனை சார்ந்த தொழில் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மாநில விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி தொடர்பான ‘ஸ்மார்ட்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை அமல்படுத்த செலவாகும் ரூ.2,200 கோடியில் 70 சதவீத தொகையானது உலக வங்கியில் கடனாகவும் மீதமுள்ள 30 சதவீத தொகையில் மாநில அரசு வைப்புநிதியில் இருந்து 27 சதவீதமும், கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலம் 3 சதவீதமும் பெறப்படும் என்றும், இந்த திட்டத்தினை 6 வருடத்திற்குள் முடிக்கவும் மந்திரி சபை தீர்மானித்தது.
பணி நிரந்தரம்
மேலும் 1993-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த மாநகராட்சி தொழிலாளர்கள் 1416 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. அது மட்டுமின்றி திட்டத்தினை விரைந்து செயல்படுத்த தொழிலாளர்கள் தேவைபடும் பட்சத்தில் மேற்கொண்டு பணி நியமனம் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மந்திரி சபையில் எடுக்கப்பட்ட மேற்கண்ட முடிவுகளை வருவாய் துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
Related Tags :
Next Story