ஈரோடு மாவட்டத்தில் 24 புதிய பஸ்கள் இயக்கம்


ஈரோடு மாவட்டத்தில் 24 புதிய பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:51 AM IST (Updated: 10 Jan 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 24 புதிய பஸ்களின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

ஈரோடு,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக தயாரிக்கப்பட்ட 555 பஸ்களின் இயக்கத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் 24 புதிய பஸ்கள் அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டலத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பஸ்களின் இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கொடி அசைத்து புதிய பஸ்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு முதலாம் கிளைக்கு 3 பஸ்களும், 2-ம் கிளைக்கு 3 பஸ்களும், 3-வது கிளைக்கு 2 பஸ்களும், கவுந்தப்பாடி கிளைக்கு 2 பஸ்களும், கோபி கிளைக்கு 3 பஸ்களும், பவானி கிளைக்கு ஒரு பஸ்சும், நம்பியூர் கிளைக்கு 3 பஸ்களும், பெருந்துறை கிளைக்கு 3 பஸ்களும், அந்தியூர் கிளைக்கு 3 பஸ்களும், சத்தியமங்கலம் கிளைக்கு ஒரு பஸ்சும் வழங்கப்பட்டு உள்ளன.

ஈரோடு-கோவை வழித்தடத்தில் 3 பஸ்களும், ஈரோடு-மதுரை வழித்தடத்தில் 2 பஸ்களும், கோவை- சேலம் வழித்தடத்தில் 6 பஸ்களும், திருப்பூர்-சேலம் வழித்தடத்தில் 2 பஸ்களும், அந்தியூர்-காரைக்குடி வழித்தடத்தில் 2 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதேபோல் ஈரோடு-சத்தியமங்கலம், ஈரோடு-ராசிபுரம், ஈரோடு-நாமக்கல், ஈரோடு-உடுமலைப்பேட்டை, கோபி-மதுரை, கோபி-தேனி, நம்பியூர்-மதுரை, அந்தியூர்-கோவை-சேலம், சத்தியமங்கலம்-தேனி ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சேனாதிபதி, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீசன், முருகுசேகர், ஜெயராஜ், கோவிந்தராஜ், ஜெயலலிதா பேரவை பகுதி இணைச்செயலாளர் நந்தகோபால், ஜீவா ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story