பிளாஸ்டிக் பைகள் பறிமுதலுக்கு எதிர்ப்பு, சேலத்தில் மளிகை கடைகள் அடைப்பு
பிளாஸ்டிக் பைகள் பறிமுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் மளிகை கடைகள் அடைக்கப்பட்டன.
சேலம்,
தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தடை விதித்துள்ளது. இதையொட்டி சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்படுத்துவதை தடுக்க தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்அடிப்படையில் கண்காணிப்பு குழுவினர் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் டவுனில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பை பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் கடைகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை அதிகமாக இருப்பதாவும் கடைக்காரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாநகர நகர்நல அலுவலர் பார்த்திபன் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றனர்.
இதற்கு அந்த கடைக்காரர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் நீங்கள் பிளாஸ்டிக் பைகளை கொடுக்கவில்லை என்றால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். இதைக்கேட்டு அவர் ஆத்திரம் அடைந்ததுடன், கடையை மூடினார். இதையறிந்த அந்த பகுதியில் இருந்தவர்களும் தங்களது மளிகை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சேலம் மாவட்ட சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி கூறியதாவது:- மளிகை கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். எந்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கலாம் என அரசின் உத்தரவில் தெளிவாக இல்லை. இதனால் எங்களின் வியாபாரம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் கடைக்காரரின் உரிமம் ரத்து செய்யப்படும் என மிரட்டல் விடுத்ததால் 250-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
இது தொடர்பாக நாங்கள் மாநகராட்சி ஆணையாளர் சதீஷிடம் பேசினோம். அவர் சோதனைக்கு செல்லும் அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார். இதனால் தான் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அதாவது மதியம் சுமார் 1 மணியளவில் அடைக்கப்பட்ட கடைகளை மாலை 4 மணியளவில் திறந்தோம். இனிமேலாவது அதிகாரிகள் கடைக்காரர்களிடம் பிரச்சினைகள் செய்யாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story