வேலூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
வேலூரில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட நிர்வாகம், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டை அருகே நேற்று நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட தொழில்மைய மேலாளர் மணிவண்ணன், வாணியம்பாடி மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் கோட்டை காந்திசிலை அருகே இருந்து புறப்பட்டு பழைய பஸ்நிலையம், லாங்குபஜார், பில்டர்பெட்ரோடு, அண்ணாசாலை வழியாக சென்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், 5 கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டு ‘பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், மண் வளம் மற்றும் பூமியை பாதுகாப்போம், கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்வோம்’ என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அவற்றுக்கான மாற்றுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக கலெக்டர் ராமன் தலைமையில் அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) ரூபன் ஆஸ்டின், காந்தி, ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.