மாவட்ட செய்திகள்

நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பாலக்கோட்டில் அ.ம.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது + "||" + In Palakkad, urging to fulfill irrigation projects,   Condemnation of the AMMK DDV Dinakaran MLA Headed, held

நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பாலக்கோட்டில் அ.ம.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது

நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பாலக்கோட்டில் அ.ம.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன நிறைவேற்ற வலியுறுத்தி பாலக்கோட்டில் அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

தர்மபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல்புதூர் அணைக்கட்டில் இருந்து கால்வாய் மூலம் தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், அளியாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், ஜெர்தலாவ் நீர்பாசன கால்வாயை நீட்டித்து புலிக்கரை ஏரி வரை தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி அ.ம.மு.க. சார்பில் பாலக்கோடு பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் வரவேற்று பேசினார். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட அவைத்தலைவர் டி.முத்துசாமி, மாவட்ட பேரவை செயலாளர் தென்னரசு, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் எஸ்.ஆர்.வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சென்னகேசவன், பாஸ்கர், பார்த்திபன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:–

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.377 கோடி மதிப்பிலான நீர்பாசன திட்டங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிவித்து அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.40 லட்சம் நிதியையும் ஒதுக்கீடு செய்தார். இந்த திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அ.ம.மு.க. சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவது குறித்து தெரிந்ததும் அவசர, அவசரமாக இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ஆய்வு பணி மேற்கொள்ளப்படுவதாக அறிவித்து உள்ளனர். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு 1,733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 550 ஏக்கர் விவசாய நிலங்களாகும். கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. சிப்காட் தொழிற்பேட்டை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் புறக்கணித்து வருகிறது. அதற்கு மாறாக தமிழக மக்கள் விரும்பாத 8 வழிபசுமை சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு பணிந்து நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களின் நலனுக்காக நாங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு தடையை ஏற்படுத்துகிறார்கள். இங்கே ஆர்ப்பாட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்கள் காவல்துறையின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளன. இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அ.ம.மு.க. ஆட்சி விரைவில் தமிழகத்தில் அமையும். அப்போது மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களும் புறந்தள்ளப்படும். மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டு வருவோம்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், நகரசெயலாளர் எம்.ஜி.மணிவண்ணன், ஒன்றியசெயலாளர்கள் குப்புசாமி, கவுதமன், தீர்த்தகிரி, அருள், சாம்ராஜ், பூங்காவனம், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் சம்பத், ராஜா, குமரேசன் உள்பட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பாலக்கோடு ஒன்றிய செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.