அ.தி.மு.க., தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக அ.ம.மு.க. உருவெடுத்து உள்ளது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க., தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக அ.ம.மு.க. உருவெடுத்து உள்ளது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 10:07 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக அ.ம.மு.க. உருவெடுத்து உள்ளது என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மல்லாபுரத்தில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக செயல்படுகிறது. நீதித்துறையின் உத்தரவுகளுக்கு எதிராகவும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அரசின் செயல்பாடுகள் உள்ளன.

சிலை கடத்தலை தடுக்க நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்ட ஐ.பி.எஸ். அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஐகோர்ட்டு மூலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதற்கு எதிராக அந்த அதிகாரி மீது காவல்துறை அதிகாரிகள் மூலமாகவே அவதூறை பரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத ஒன்றாகும்.

சேலத்தில் இருந்து அரூர்–ஊத்தங்கரை வழியாக வாணியம்பாடி வரை 4 வழி சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி விவசாயிகளை பாதிக்கும் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த முயல்கிறது. தமிழக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறைவேற்ற முயற்சிக்கிறது. ஏற்றி வைத்த ஏணியை எட்டி உதைக்கும் இவர்களின் துரோக ஆட்சியை சாணக்கியத்தனம், ராஜதந்திரம் என்று பெருமைபடுத்தி கொள்வது வேடிக்கையாக உள்ளது.

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே மறைமுக கூட்டணி உள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. 60–க்கு 40 என்ற அடிப்படையில் அவர்களுக்குள் பங்கீடு செய்து கொள்கிறார்கள். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஆளும் கட்சியினர் எதிர்ப்பதற்கு டெபாசிட் போய்விடும் என்பதே காரணம். ஆனால் கருணாநிதியின் சொந்த தொகுதியில் எதிர்க்கட்சியான தி.மு.க. போட்டியிட தயக்கம் காட்டி தேர்தலை நிறுத்த வலியுறுத்தி இருப்பது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தை காட்டுகிறது.

ஓசூர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்கள் இப்போது இதைபற்றிதான் பேசிக்கொள்கிறார்கள். திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க. மட்டுமே தைரியத்துடன் தேர்தலை சந்திக்க தயாராக இருந்தது. அந்த இடைத்தேர்தல் நடைபெற்று இருந்தால் ஆர்.கே. நகர் தொகுதியில் நான் பெற்ற வெற்றியை விட அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருப்போம். அது நடந்திருந்தால் தி.மு.க. மீது தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் உடைந்து போய் இருக்கும். அதை தவிர்க்கவே இடைத்தேர்தலை நிறுத்திவிட்டனர்.

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக அ.ம.மு.க. உருவெடுத்து உள்ளது. முன்பு என்னை சில்லரை காசு என்று விமர்சித்தார்கள். சில்லரை காசுகளை பார்த்து பயப்படுபவர்கள் செல்லாக்காசு ஆகிவிடுவார்கள். ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டரே இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ளார். இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்க முடியாது.

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மு.க.ஸ்டாலின் தற்போது கிராம ஊராட்சிகளில் கூட்டங்களை நடத்துவது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. பணத்தை வைத்து கொண்டு மட்டும் அரசியல் நடத்த முடியாது. தமிழகத்தை யார் தலைநிமிர செய்வார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

அ.தி.மு.க., தி.மு.க.விற்கு மாற்றாக அ.ம.மு.க.வை தேர்வு செய்ய மக்கள் தயாராகி விட்டனர். தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால் தனியாகவே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.


Next Story