மாவட்டத்தில் 4.25 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கடந்த 2-ந் தேதி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் தங்கமணி கடந்த 6-ந் தேதி 6 இடங்களில் தொடங்கி வைத்தார்.
7-ந் தேதி முதல் அனைத்து ரேஷன்கடைகளிலும் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையே வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதால், நேற்று அவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கப்படவில்லை. ஆனால் பச்சரிசி, சர்க்கரை போன்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. அதேசமயம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 24 ஆயிரத்து 872 ரேஷன்கார்டுகள் உள்ளன. இவற்றில் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரத்து 421 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகை வரை இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் பொறுமையாக தங்கள் ரேஷன்கார்டுக்கு உரிய பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story