பரமத்தி வேலூர் பகுதியில் பொங்கலை முன்னிட்டு பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
பரமத்தி வேலூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கு.அய்யம்பாளையம், பாகம்பாளையம், பொன்நகர், கபிலர்மலை, தீர்த்தாம்பாளையம், இராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பானை செய்யும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது சில்வர் பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்கள் அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்துவதால் மண்பானைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மண்பாணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்களது மண்பாண்ட தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் மாற்று தொழிலுக்கு செல்லவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தொழில் காலப்போக்கில் அழிந்து விடுமோ என மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை மாதத்தில் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை பயன்படுத்துகின்றனர். கோவில் திருவிழா காலங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட சாமி உருவங்கள், விலங்குகள் உருவிலான பொம்மைகள் ஆகியவற்றை மண்பானை தொழிலாளர்களிடம் இருந்து வாங்கி கோவிலுக்கு எடுத்துச்சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டும் சூரிய பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் ஆகியவற்றிற்கு பானைகளை பயன்படுத்துகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த பகுதியில் மண்பானை தொழிலாளர்கள் பொங்கல் பானைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ள அருணாசலம் என்பவர் கூறியதாவது:- கடந்த ஆண்டு மூன்று படி முதல் நான்கு படி அரிசி வரை பொங்கல் வைக்கும் பானைகள் ரூ.150 வரைக்கும், ஒரு படி முதல் இரண்டு படி அரிசி வரை பொங்கல் வைக்கும் பானைகள் ரூ.100 வரைக்கும் விற்பனை யானது.
தற்போது மூன்று படி முதல் நான்கு படி அரிசி வரை பொங்கல் வைக்கும் பானைகள் ரூ.200 வரைக்கும், ஒரு படி முதல் இரண்டு படி அரிசி வரை பொங்கல் வைக்கும் பானைகள் ரூ.150 வரை விற்பனையாகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மண்பாணை செய்வதற்கு உரிய களிமண் கிடைக்காததால் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள முருங்கை கிராம பகுதியில் உள்ள ஒரு ஏரியில் இருந்து களிமண்ணை கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக வண்டியை வாடகைக்கு எடுத்து செல்கிறோம். மேலும் களிமண்ணை எடுப்பதற்கு அந்த கிராம மக்கள் சில ஆண்டுகளாக அனுமதி அளிக்காததால் களிமண்ணை கொண்டுவருவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மண்பாண்ட தொழில் ஈடுபடாதவர் களுக்கு மின்சார திருவை சக்கரம் வழங்கப்படுகிறது. ஆனால் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மின்சார திருவை சக்கரங்களை வழங்கு வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் களிமண் கிடைப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மண்பாண்ட தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதால் அரசு மாதம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். இலவச மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story