சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 53 புதிய பஸ்கள் இயக்கம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 53 புதிய பஸ்கள் இயக்கம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 53 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதனை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சேலம், 

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், செம்மலை, மனோன்மணி, ராஜா, வெற்றிவேல், சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி பேசும் போது கூறியதாவது:-

சேலம் கோட்டத்தில் 53 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து விழுப்புரம், கோவை, மதுரை, கடலூர், சிதம்பரம், வேளாங்கண்ணி, புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சேலத்தில் இருந்து மேட்டூர், ஊத்துக்குளி வழியாக திருப்பூருக்கும், மேட்டூரில் இருந்து தர்மபுரி வழியாக சென்னைக்கும், சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கும்பகோணத்திற்கும், நாமக்கல்லில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கும் இந்த புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக மதுரைக்கும், கள்ளக்குறிச்சியில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கும், சேலத்தில் இருந்து பெருமாநல்லூர் வழியாக திருப்பூருக்கும், திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கும், சேலத்தில் இருந்து திருச்செங்கோடு, பெருமாநல்லூர் வழியாக திருப்பூருக்கும், ஓசூரில் இருந்து திருச்சிக்கும் என பல்வேறு வழித்தடங்கள் வழியாக 53 புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் சென்னகிருஷ்ணன் மற்றும் அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டம் மேலாண் இயக்குனர் அரவிந்த், துணை இயக்குனர்கள் ஜெயக்குமார், சின்னசாமி, குமார், ஜீவரத்தினம், கலைவாணன், லெட்சுமண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story