‘பேட்ட’ திரைப்படம் வெளியீடு ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் ‘பேட்ட’ திரைப்படம் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சேலம்,
சேலம் மாநகர், மாவட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் நேற்று பல்வேறு தியேட்டர்களில் வெளியானது. இதையொட்டி காலை 7 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்தை காண ரசிகர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே தியேட்டர்கள் முன்பு திரண்டிருந்தனர்.
மேலும் படத்தை வரவேற்கும் வகையில் ரஜினி ரசிகர்கள் சேலம் தாதகாப்பட்டியில் இருந்து பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டிகள் மற்றும் பேட்ட படத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டி அலங்கரிக்கப்பட்ட கார்கள், ஏராளமான மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்த ஊர்வலம் சேலம் திருச்சி மெயின் ரோடு பெரியார் வளைவு வழியாக கே.எஸ். தியேட்டர் முன்பு முடிவடைந்தது. இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் அங்கு கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். தியேட்டர்களில் டிக்கெட் எடுப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி படம் வெளியாகியுள்ளது. இதை வரவேற்கும் வகையில் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் நாங்கள் ஊர்வலமாக வந்து ரசிகர்களை உற்சாக படுத்தினோம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என்றனர்.
சேலம் மாநகரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், புறநகரில் 20-க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் பேட்ட திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் ரஜினி கட்-அவுட்களை ரசிகர்கள் வைத்திருந்தனர். தியேட்டர்கள் ரசிகர்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story