பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் கரும்புகள்


பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் கரும்புகள்
x
தினத்தந்தி 10 Jan 2019 10:15 PM GMT (Updated: 10 Jan 2019 5:39 PM GMT)

பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்து கரும்புகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

எடப்பாடி, 

சேலம் மாவட்டத்தில் கரும்பு விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கரும்புகளை அறுவடை செய்யும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் மற்றும் கொங்கணாபுரம் போன்ற பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குறிப்பாக செங்கரும்புகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது அவை நன்கு செழித்து வளர்ந்து உள்ளன,

இங்கு பயிரிடப்பட்ட செங்கரும்புகள் இனிப்பு சுவை அதிகம் உள்ளதால் வெளிமாநிலங்களான கர்நாடகா, மராட்டியம், குஜராத் போன்ற பகுதிகளுக்கு அறுவடை செய்து லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய கூலி தொழிலாளர்கள் மூலம் விவசாயிகள் செங்கரும்பை அறுவடை செய்து லாரிகளில் ஏற்றி வெளிமாநிலத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளான பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் சாகுபடி செய்யும் கரும்புகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தற்போது நன்கு விளைந்துள்ளதால் அதனை அறுவடை செய்து, லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை குஜராத், கர்நாடகா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கிறார்கள். இங்கு விளையும் செங்கரும்புகளில் இனிப்பு சுவை அதிகம் என்பதால் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றனர்.

Next Story