இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் தூத்துக்குடியில் 2 பேர் கைது


இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் தூத்துக்குடியில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2019 4:45 AM IST (Updated: 10 Jan 2019 11:35 PM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் கடத்தப்படுகிறதா? என கடலோர பாதுகாப்பு போலீசார், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும், தூத்துக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தஸ்நேவிஸ் நகர் பகுதியில் கடல் அட்டை பதுக்கி இருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகே தஸ்நேவிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த முகமது இத்ரிஸ் (வயது 62), பட்டினமருதூரை சேர்ந்த 17 வயது வாலிபர் ஆகிய 2 பேரும் இருந்தனர். அவர்கள் பெரிய பாத்திரத்தில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வைத்து அவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

உடனடியாக போலீசார் முகமது இத்ரிஸ் மற்றும் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை சேகரித்து, காய வைத்து ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே அங்கு இருந்த 200 கிலோ கடல் அட்டைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 3 சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள், 5 பெரிய பாத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

பின்னர் கடலோர பாதுகாப்பு போலீசார், கடல் அட்டை மற்றும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Next Story