பழுதான சாலையை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்


பழுதான சாலையை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 11:36 PM IST)
t-max-icont-min-icon

பழுதான சாலையை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சி 1-வது வார்டில் மேல்கூடலூர், கே.கே.நகர், கோக்கால் உள்பட பல பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் கோக்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10.30 மணிக்கு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தங்கள் பகுதியில் பழுதாகி குண்டும், குழியுமாக கிடக்கும் சாலையை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி மேலாளர் நாகராஜ், பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், குடிநீர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் நேரில் வந்து, பொதுமக்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டு கொண்டனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் சக்திவேல் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி அதிகாரிகள் தரப்பில், சாலை அமைக்கும் பணிக்காக விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. வருகிற 1-ந் தேதி பணி தொடங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

பின்னர் கோக்கால் பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து குண்டும், குழியுமாக கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் சாலை அமைக்கும் பணி தொடங்கி விடுவதாக வாக்குறுதி மட்டுமே அளித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

தொடர்ந்து அரை மணி நேரம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சீரமைக்கப்பட்டது. தொடர் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், அடுத்த சில ஆண்டுகளில் குண்டும், குழியுமாக மாறியது. பள்ளிக்கூட குழந்தைகள், நோயாளிகளை அழைத்து செல்ல எந்த வாகனங்களும் வருவது இல்லை. கோக்கால் பகுதி என்று பெயரை கூறினாலே வாகன ஓட்டிகள் வர மறுக்கின்றனர். இதனால் 2015-ம் ஆண்டு முதல் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இரவில் சாலையில் நடந்து செல்லவும் முடிய வில்லை. தமிழக அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா கோக்கால் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சாலை வசதி இல்லாமல் பயனாளிகளும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் சாலை அமைக்கவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story