அனுமதி பெறாமல் சிறப்பு காட்சி திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


அனுமதி பெறாமல் சிறப்பு காட்சி திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2019 4:00 AM IST (Updated: 10 Jan 2019 11:41 PM IST)
t-max-icont-min-icon

அனுமதி பெறாமல் சிறப்பு காட்சி திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று (அதாவது நேற்று) வெளியான திரைப்படங்களுக்கு சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அது குறித்து பரிசீலிக்கப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள சில சினிமா தியேட்டர்களில் அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து சிறப்பு காட்சி திரையிடவில்லை. பல்வேறு இடங்களிலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கிடைத்த தவறான தகவலால் சிறப்பு காட்சி திரையிட்டனர். பின்னர் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறப்படவில்லை என்பதை உணர்ந்து, சிறப்பு காட்சியை நிறுத்தி உள்ளனர்.

சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டதாக ஒரு பத்திரிகையில் வந்த தவறான செய்தியை நம்பி, சிறப்பு காட்சி திரையிட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனினும் சிறப்பு காட்சி திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், விளக்கம் கேட்டும் நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்குவதில் தமிழக அரசு பாகுபாடு காட்டவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சர்கார் திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட 9 நாட்கள் அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் தமிழக அரசு அந்த நிறுவனத்துக்கு 10 நாட்கள் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் உள்ளது. அதற்குள் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும். சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி இருந்தபோது, அம்மா திரையரங்கம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரும் அந்த கோரிக்கையை வைத்துள்ளனர். சட்டமன்றத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை நடைபெறும்போது, அம்மா திரையரங்கம் தொடங்குவது பற்றி அரசு பரிசீலித்து அறிவிக்கும்.

வீட்டில் இருந்து எடுத்து வரும் குடிநீர், உணவுப்பொருட்களை சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கின்றனர். திரையரங்குகளில் உணவுப்பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யவும், வீட்டில் இருந்து எடுத்து வரும் குடிநீர், உணவுப்பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நபர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் மக்களுக்கு பயனளிக்கும் எந்த நலத்திட்டத்தையும் தி.மு.க. எதிர்க்கும் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதனால் தமிழக மக்கள் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.

அ.தி.மு.க.வின் தேர்தல் கூட்டணி தொடர்பாக துணை சபாநாயகர் தம்பித்துரை அவரது சொந்த கருத்தை தெரிவித்து உள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அதிகாரம் இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராக உள்ளது. இதற்காக அனைத்து வாக்குசாவடிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பாகவே மதுரை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

வருகிற 20-ந்தேதி நெல்லையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அ.தி.மு.க.வின் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை தேர்தலுக்கு முன்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முடிவு செய்வார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போகாத ஊருக்கு வழி சொல்கிறார். அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, எந்த விசாரணையும் மேற்கொள்ளப்போவதும் இல்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை நடைபெறும்போது, அதைப்பற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பின்னர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவரும். அதன் பின்னர் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story