பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பு காட்சி ரத்து
பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் 2 திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படமும், ஒரு திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்‘ திரைப்படமும் வெளியானது. இதையொட்டி அந்த திரையரங்குகளில் காலை 7.30 மணிக்கு சிறப்பு காட்சியாக திரைப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ரசிகர் மன்றத்தினர் டிக்கெட் வாங்கி இருந்தனர். ஆன்-லைன் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தியேட்டர்களில் சிறப்பு காட்சி திரையிட அனுமதி பெறாததால், அங்கு சிறப்பு காட்சி திரையிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து தியேட்டர்களிலும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. அந்த திரையரங்குகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வழக்கம்போல் காலை 10.30 மணி, மதியம் 1.30 மணி, மாலை 5.30 மணி, இரவு 9.30 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. சிறப்பு காட்சிக்கு டிக்கெட் வாங்கி இருந்த ரசிகர்கள், மற்ற காட்சிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில்பட்டியில் ‘பேட்ட’ திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு தியேட்டரின் முன்பாக ரஜினி மக்கள் இயக்கத்தினர் ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மற்றொரு தியேட்டரின் முன்பாக பொங்கலிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதேபோன்று ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியான தியேட்டரின் முன்பும் நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தினர் ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
புதிய திரைப்படங்கள் வெளியான அனைத்து திரையரங்குகளும் ‘ஹவுஸ்புல்’ காட்சிகளாக ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
Related Tags :
Next Story