தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது


தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 10:15 PM GMT (Updated: 10 Jan 2019 6:43 PM GMT)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி சின்னமணிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2-ந்தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு இரவு அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டிற்குள் சென்றபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 2¾ பவுன் சங்கிலி திருடப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அந்த வழியாக மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை உடைத்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து ராஜ்குமார் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்த கூலித்தொழிலாளியான செந்தூர்பாண்டி(27) என்பவர் சில நாட்களில் வீட்டை காலி செய்து கொண்டு திரு.வி.க. நகரில் குடியேறி இருந்தார். சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் வீட்டின் பின்பக்கத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து சங்கிலியை திருடி சென்றதை ஒப்பு கொண்டார். இதனையடுத்து செந்தூர்பாண்டியை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story