பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் கரும்பு விற்பனை மும்முரம்
பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் கரும்பு, மஞ்சள் குலை, பனை ஓலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லை,
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் லாரிகள் மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. ஏராளமானவர்கள் பொங்கல்படி கொடுக்க ஆட்டோ, கார் மூலம் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாளையங்கோட்டை மார்க்கெட், நெல்லை டவுன் மார்க்கெட் பகுதிகளிலும் கரும்பு கட்டுகள், மஞ்சள் குலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை ஓலைகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சீவலப்பேரி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பனை ஓலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story