மயிலாடுதுறையில், தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து 15 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியது


மயிலாடுதுறையில், தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து 15 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியது
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:10 PM GMT)

மயிலாடுதுறையில் தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து 15 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கி உள்ளது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்திய அரசு ரூ.20 கோடி, மாநில அரசு ரூ.15 கோடி, பொது மக்கள் பங்களிப்பு நகராட்சி மூலம் ரூ.7 கோடி ஆகமொத்தம் ரூ.42 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்தே மற்ற ஊர்களில் செம்மையாக செயல்படுத்தப்பட்டது போல் மயிலாடுதுறையில் செயல்படுத்தப்படவில்லை என்று புகார் எழுந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கி கொள்கிறது. மயிலாடுதுறையில் தரங்கம்பாடி செல்லும் சாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மெயின் லைனில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இந்தநிலையில் அதே சாலையில் ½ கிலோ மீட்டர் தொலைவில் நேற்று பாதாள சாக்கடை குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் 15 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியது. உடைப்பு ஏற்பட்ட இடம் மெயின் லைனாக உள்ளதால் மேலும் சாலை உள்வாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தை சுற்றிலும் இரும்பு கேட் தடுப்பு அமைத்தனர். இந்த பள்ளம் சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ளதால் காரைக்கால், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், வாகனங்கள் விரைவில் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பல தெருக்களில் ஆள்துளை தொட்டி மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு பாதாள சாக்கடை திட்டத்தை அரசு மறுமதிப்பீடு செய்து அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்து மீண்டும் திட்டம் முழுவதையும் சீரமைக்க வேண்டும். முதற்கட்டமாக கனரக வாகனங்கள், பஸ் போக்குவரத்து அதிகம் உள்ள காந்திஜி சாலை, காமராஜ் சாலை, பட்டமங்கலத்தெரு, கச்சேரி ரோடு உள்ளிட்ட சாலைகளில் பாதாள சாக்கடை திட்டத்தை மீண்டும் முழுமையாக சீரமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நகராட்சி நிர்வாக ஆணையர் மூலம் அரசிடம் நிதி பெற்றுதர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதற்குள் மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க மக்கள் பிரதிநிதிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story