மாவட்ட செய்திகள்

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் சிறையில் அடைப்பு + "||" + Rs.50 thousand bribe and arrested in Tiruchi police assistant commissioner jail

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் சிறையில் அடைப்பு

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் சிறையில் அடைப்பு
திருச்சியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் உதவி கமிஷனர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது. இதில் சொத்து ஆவணங்கள் சிக்கின.
திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் சீதாராமன். இவருக்கு சொந்தமான இடம் திருச்சி விமான நிலையம் அருகே உள்ளது. அந்த இடம் தொடர்பாக சீதாராமனுக்கும், இன்னொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. எனவே, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து சீதாராமன் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க, மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் அருள் அமரனுக்கு அவர் உத்தரவிட்டார்.


இதுகுறித்து விசாரித்த உதவி கமிஷனர் அருள் அமரன், நிலம் தொடர்பான புகாரில் சீதாராமனுக்கு சாதகமாக செயல்பட வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சீதாராமன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனை சந்தித்து புகார் கொடுத்தார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.50 ஆயிரத்தை நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு, உதவி கமிஷனர் அருள் அமரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சீதாராமன் கொடுத்தார். அப்போது அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் உதவி கமிஷனர் அருள் அமரனை கையும் களவுமாக கைது செய்தனர்.

தொடர்ந்து அவரது அலுவலகத்தில் இரவு 10.30 மணிவரை சோதனை நடத்தினர். அப்போது சில குறிப்புகள் அடங்கிய ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதன் பின்னர், திருச்சி கிராப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிலும் விடிய, விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையை நேற்று அதிகாலை 2.35 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் முடித்துக் கொண்டு வெளியேறினர். ஆனால், வீட்டில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவில் பெரிய தொகை ஏதும் இல்லை. ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவான பணம் இருந்ததால் அவை குறித்து எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில் சில சொத்து ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர், நேற்று காலை 8 மணிக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கோர்ட்டு தனி நீதிபதி சாந்தி வீட்டில் உதவி கமிஷனர் அருள் அமரன் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

லஞ்சம் வாங்கி கைதான அருள்அமரன், ஏற்கனவே திருச்சி கண்டோன்மெண்ட் மற்றும் விமான நிலைய பகுதியில் உதவி கமிஷனராக பணியாற்றி உள்ளார். 55 வயதான அவர், பணி ஓய்வுபெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அருள் அமரனை பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கை உயர் அதிகாரிகளால் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...