மாவட்ட செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 10-வது நாளாக தொடரும் நெசவாளர்களின் வேலைநிறுத்தம் + "||" + Without an agreement on talks The strike of the weavers that continue on the 10th day

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 10-வது நாளாக தொடரும் நெசவாளர்களின் வேலைநிறுத்தம்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 10-வது நாளாக தொடரும் நெசவாளர்களின் வேலைநிறுத்தம்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், 10-வது நாளாக நெசவாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்கள் உள்ளன. இவற்றில் காட்டன் ரக சேலைகள், வேட்டிகள் உற்பத்தியாகின்றன.

விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த முறை வழங்கப்பட்ட கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் முடிந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி, கடந்த 1-ந்தேதியில் இருந்து நெசவாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், விசைத்தறி நெசவாளர்கள் கொண்ட குழுவினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் 10-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:-

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்திலும் நெசவாளர்களுக்கான கூலி உயர்வு பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து 19 சதவீத கூலி உயர்வு வழங்கியதால், நெசவாளர்களின் வேலைநிறுத்தம் அடுத்த நாளே வாபஸ் பெறப்பட்டது. ஆனால் சக்கம்பட்டியில் கூலி உயர்வு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

இது தொடர்பாக திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் சுமுகத்தீர்வு ஏற்படும். அதுவரை விசைத்தறி நெசவாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே 10 நாட்களாக வேலை நிறுத்தம் தொடர்வதால் நெசவாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.