நிலக்கோட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நிலக்கோட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டையில் நால்ரோடு முதல் மாரியம்மன் கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இரு புறங்களிலும் கடைகள் முன்பு சிலர் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். மேலும் அதில் உள்ள சாக்கடை கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இதனால் சாக்கடையில் நீர் தேங்கி அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்மனு கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாமல் இருந்தது. மேலும் இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தபட்டவர்களுக்கு நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி நோட்டீஸ் கொடுத்து இருந்தார். இதற்கான கெடு முடிந்தது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைசாமி, தாசில்தார் நவநீதகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் சுமார் 50 பேர் நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் இருந்து மாரியம்மன் கோவில் வரை பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சில வியாபாரிகள் தாமாக முன்வந்து ஆட்களை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். நிலக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு செல்லும் சாக்கடை கால்வாய் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் சாக்கடை கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்பு அகற்றப்பட்டு சாக்கடை நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் சாக்கடை கால்வாய்க்கு மேல் இருந்த கடைகளும் அகற்றப்பட்டன. நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன, இந்த பணி இன்றும்(வெள்ளிக்கிழமை) தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story