வங்கி மோசடி வழக்கில் சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனரின் ரூ.50 கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை


வங்கி மோசடி வழக்கில் சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனரின் ரூ.50 கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2019 3:15 AM IST (Updated: 11 Jan 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியனின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

சென்னை உள்பட தமிழகத்திலும், குஜராத், டெல்லி, மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ‘சுபிக்‌ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்தது. ‘சுபிக்‌ஷா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சுப்பிரமணியன் (வயது 50) ஆவார். இவரை ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் என்று தான் அழைப்பார்கள்.

இந்த நிலையில் சுபிக்‌ஷா நிறுவனத்திற்காக, பல வங்கிகளில் ரூ.890 கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த தொகையை ‘சுபிக்‌ஷா’ நிறுவனத்தில் மட்டும் முதலீடு செய்யாமல், பல்வேறு வகைகளில் சொத்துகள் வாங்கியதாக வந்த புகார்களின் பேரில், சுப்பிரமணியன் மீது மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

ரூ.50 கோடி சொத்துகள் முடக்கம்

விசாரணையில் அதில் உண்மை இருப்பது தெரியவந்ததால், முறைகேடான பணபரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் சுப்பிரமணியன் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த வழக்கில் ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு சொந்தமான ரூ.9½ கோடி மதிப்புள்ள பொருட்கள் முடக்கப்பட்டது. இந்தநிலையில் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான ரூ.50 கோடியே 2 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது.

Next Story